நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் அனைவரையும் இணைத்துக் கொண்டு செயல்படுவோம் என்றும் நீட் தேர்வின் காரணமாக இனி ஒரு உயிர் கூட போகாத வண்ணம் செயலாற்றுவோம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உடற்பயிற்சிக்கூடத்தைத் திறந்து வைத்த அவர் பின்பு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் என்ன நிலை என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் பள்ளிகள் திறக்கப்படும்போது சுழற்சி முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறைக்கு 20 மாணவர்கள் அமர வைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
மேலும், நீட் விவகாரம் குறித்துப் பேசிய அவர் “நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதில் முதலமைச்சர் மிகவும் தீவிரமாக இருக்கிறார். பாஜக தவிர அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை வரவேற்றுள்ளனர். இந்த சட்டப் போராட்டத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவோம். இவ்விவகாரத்தில் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. நீட் காரணமாக இனி ஒரு உயிர் கூட போடாத வண்ணம் பணியாற்றுவோம். மேலும், முழு வீச்சில் பள்ளிகள் முழுவதும் திறக்கும் போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான கவுன்சலிங் மையம் அமைக்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்படும்” என்று கூறினார்.
























