நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அரியலூர் அருகே மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்கிற வழக்கறிஞரின் மகள் கனிமொழி. நாமக்கல் க்ரீன் கார்டன் பள்ளியில் படித்த இவர் 12-ம் வகுப்பில் 562.28 (93 %) மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவராகும் கனவோடு இருந்த கனிமொழி தஞ்சாவூரில் உள்ள தாமரை இன்டர் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை துளாரங்குறிச்சியில் அவரது வீட்டில் கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தோல்வி பயத்தால்தான் தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கனிமொழியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு பயம் காரணமாக சமீபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்கிற மாணவன் தற்கொலை செய்து கொண்டதன் அதிர்வே இன்னும் ஓயாத நிலையில் அடுத்ததாக ஓர் தற்கொலை நிகழ்ந்திருப்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
























