தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திட்ட பெரும் பேறுகளில் ஒன்று வைகைப்புயல் வடிவேலுவின் திரைப்பங்களிப்பு. எப்போது பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை சிரிக்காமலும் ரசிக்காமலும் கடக்க முடியாது. பார்வையாளனை அலுப்புத்தட்டாது ஈர்த்து வைத்திருக்கும் ஆற்றல் வடிவேலுவுக்கு உண்டு. அவர் தமிழ் சினிமாவின் காமெடி டிராக்கில் புதிய பாணி ஒன்றை உருவாக்கினார். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த பாணிக்கென எந்த முன்மாதிரிகளும் தமிழ் சினிமாவில் இல்லை அது மட்டுமின்றி வடிவேலுவைத் தவிர அந்த பாணியை இனி எவராலும் சரிவர கையாள முடியுமா என்பது கேள்விதான்.
வடிவேலு திரையுலகுக்கு அறிமுகமானது மிக முக்கியமான காலகட்டம். அப்போது, கவுண்டமணி – செந்தில் கூட்டணி காமெடி போர்ஷனில் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. நடிகர் ராஜ் கிரண் மூலம் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படம் வழியாக தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகமாகும் வடிவேலுவுக்கு ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்கள்தான் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை செந்திலோடு சேர்ந்து கவுண்டமணியிடம் அடி வாங்கும் கதாப்பாத்திரங்கள். கவுண்டமணியின் மிதியைக்கூட தாங்க முடியாத அளவுக்கு மெலிந்த தேகம், கருத்த முகம். அவ்வளவுதான் வடிவேலு. பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லாத அந்த வடிவேலு வரும் காலங்களில் நிகழ்த்தவிருக்கும் அற்புதங்கள் குறித்து அன்றைக்கு யாருக்கும் தெரிந்திருக்காது.
கால மாற்றத்தில் கவுண்டமணி – செந்தில் கூட்டணி வகை நகைச்சுவைகள் காலாவதியாகின்றன. புதிய பாணி நகைச்சுவைக்கான தேவை உருவான போது வடிவேலு புதிய பாணி ஒன்றை உருவாக்குகிறார். மற்றவரை பகடி செய்வதன் மூலம் நிகழ்த்தும் நகைச்சுவையிலிருந்து மாறி தன்னையே காமெடி மெட்டீரியலாக்கிக் கொள்கிற பாணிதான் அது. வெற்றுச்சவடால் பேசி அடிவாங்கினாலும் மீசையில மண் ஒட்டலைல என்கிற கணக்காக அதே மிடுக்கோடு திரிகிற அந்த உடல்மொழிதான் வடிவேலுவின் அடையாளம்.

அதிரடியான சண்டைக்காட்சிகளில் நடிப்பவர்களை விட, தங்களை சிரிக்க வைக்கிறவர்களையே குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். அப்படியாக குழந்தைகள் வடிவேலுவைக் கொண்டாடினார்கள். வடிவேலுவின் வசனங்களை அவர்களும் பேசி சிரித்தனர். திரைத்துறையைப் பொறுத்த வரை குழந்தைகளை யார் கவர்கிறார்களோ அவர்களுக்குத்தான் பெரிய மார்கெட் உருவாகும். அப்படித்தான் வடிவேலுவுக்கான மார்க்கெட் உருவானது.
பெருநகரவாசிகள் தொடங்கி கிராமவாசிகள் வரை எவ்வித பாரபட்சமுமின்றி அனைவரது விருப்புக்கும் உள்ளான கலைஞனாக உருவெடுத்தார். நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியான நகைச்சுவைகளைக் கொடுத்தார். இது வடிவேலுவின் காலம் என்று சொல்லும்படியாக திரைத்துறையில் ஒரு காலகட்டத்தையே முழுவதுமாக ஆட்சி செய்தார் வடிவேலு. பெரிய கதாநாயகர்களின் படங்கள் கூட வடிவேலுவின் கால்ஷீட்டுக்காக காத்து நின்ற காலம் இருந்தது.
காய்கறி வியாபாரி, மீன் வியாபாரி, ஆட்டோ ஓட்டுநர், தபால்காரர், கோவில் மணி அடிப்பவர், வழக்கறிஞர் வேலைவெட்டிக்குச் செல்லாத தண்டச்சோறு என வடிவேலு ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை. அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் பின் இருக்கிற சமூகத்தின் பொதுப்பார்வையை எல்லாம் தனது நகைச்சுவை மூலம் அடித்து நொறுக்கினார் வடிவேலு. நாயகர்களாகவும், வில்லன்களாகவுமே காட்டப்பட்டு வந்த போலீஸ் கதாப்பாத்திரத்தை நகைச்சுவைக்குள் பொருத்தியது வடிவேலுதான். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அவர் நாயகனாவும் நடித்தார். முழுவதும் சமகால அரசியலை பகடி செய்யும் விதமாய் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தில் வடிவேலுவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.

வடிவேலுவின் குறிப்பிட்ட சில வசனங்கள் அந்தத் தொணிக்காகவே பிரபலமடைந்தன.
“வாடா நீ வாடா என் ஏரியா பக்கம் வாடா”
“வாட் நான்சென்ஸ் யுவர் டாக்கிங் அபௌட் மீ”
”சேகர் செத்துருவான்”
”நாம்பாட்டுக்கு சிவனேன்னுதானடா போய்க்கிட்டிருந்தேன்”
”என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன்”
“மலெ நல்லாருக்கியா மலெ”
“நான் ஏண்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்குப் போகப்போறேன்”
“கடுப்பேத்துறார் மை லார்ட்”
இது போன்று பெரும்பட்டியலே போட முடியும். சாதாரண வசனமாக அந்த சூழல் மற்றும் அதை வடிவேலு உச்சரிக்கும் தொணி அதனை காமெடியாக மாற்றுகிறது. அந்த ரசவாதத்தில் கை தேர்ந்தவர் வடிவேலு. சமூகவலைதளங்களின் வருகைக்குப் பிறகு உருவான மீம் வடிவத்தின் கடவுள் என்றே வடிவேல் கொண்டாடப்படுகிறார். இன்றைக்கு நாட்டு நடப்புகள் ஒவ்வொன்றுக்கும் மீம் போட வடிவேலுவிடம் டெம்ப்ளேட் இருக்கிறது. இன்னும் குறைந்தது 50 ஆண்டுகளுக்கான டெம்ப்ளேட்டை உருவாக்கியார் வடிவேலு.
தற்போது தனிப்பட்ட பல பிரச்னைகளைக் கடந்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். பழைய ஃபார்முடன் அவர் மீண்டும் பங்களிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த கால இடைவெளியில அவரது ஃபார்மை அவர் தக்க வைத்திருந்தார் எனில் அடுத்த இன்னிங்ஸிலும் அடித்து நொறுக்குவார் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பட அறிவிப்பு விழாவில் அதே பழைய உற்சாகத்தோடு பேசியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவுக்கே உரித்தான உடல்மொழியோடு அவர் இப்புதிய தலைமுறையையும் கவர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப்போகிறார் என்பதை பார்ப்போம்!
























