தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போது அத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தபட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆகவே புதிதாக உதயமான 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதியை செப் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்,
“செப் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும். இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்” என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
























