இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி, விரைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது பேட்டிங்கில் கூடுதல் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் பிசிசிஐ வட்டார தகவல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அக்டோபர் -நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
33-வயதாகவும் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையைக் குறைக்கும் வண்ணம் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பைத் துறக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் கோலி, தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்துள்ளார்.
கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை வகித்து அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி டைட் ஆகவும், 2 ஆட்டங்கள் முடிவில்லாமல் இருக்கிறது. 45 டி20 போட்டிகளுக்கு தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 19 தோல்விகளையும் கண்டுள்ளார். 2 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. 65 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற கோலி, அதில் 38 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

வெற்றிகரமான கேப்டனாக கோலி வலம் வந்தாலும், குறிப்பாக ஐசிசி தொடர்பான எந்த முக்கியப் போட்டியிலும் இந்திய அணிக்கு கோலியால் கோப்பையை வென்று கொடுக்க முடியவி்ல்லை. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்கள் குறித்தும் பிசிசிஐக்கு கோலி மீது கடும் அதிருப்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணிக்கு 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முடியவில்லை. இது கோலியின் கேப்டன்ஷிப் மீதான அழுத்தத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
அதேசமயம், ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துவரும் ரோஹித்சர்மா 123 போட்டிகளில் 74 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார், 5 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற செய்திகள் வேகமாகப் பரவி வந்த நிலையில் இச்செய்திகள் எதுவும் உண்மையில்லை என்று பி.சி.சி.ஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் பத்திரிகையாளர்களிடம் “இச்செய்தி எதுவும் உண்மையில்லை. கேப்டன் பொறுப்பை பிரித்து வழங்குவது குறித்த எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என்று மறுத்திருக்கிறார்.
























