தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் ஆதரவோடு நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு பல எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கியது. அதன் விளைவாக அனிதா என்கிற மாணவி மருத்துவர் கனவு நிறைவேறாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது நீட் தேர்வுக்கு எதிரான பெரும் அலையைக் கிளப்பியது. இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு பயத்தின் காரணமாக தனுஷ் என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்டது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். பாஜகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்து நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அரசு முடிவு செய்துள்ளது.
























