நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷின் மரணத்துக்கு திமுக அரசுதான் காரணம் எனக்கூறியும் அதற்கு திமுக தரப்பில் இருந்து முறையான எந்த விளக்கங்களும் அளிக்கவில்லை என்பதால் அதிமுகவின சட்டப்பேரவியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ், ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நீட் எழுதி தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய நிலையில், முதல்வரிடமிருந்து உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி “ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை. ஆகவே மாணவன் தனுஷ் மரணத்துக்கு திமுக அரசுதான் காரணம். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர். ” என்று தெரிவித்தார்.
























