டெல்லியில் இன்று விடியற்காலை முதல் கனமழை இடைவிடாமல் பெய்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகள், சுரங்க வழித்தடங்களில் 10 அடி உயரத்துக்கும் மேல் நீர் தேங்கி இருப்பதால் வாகனங்களை அவற்றில் செலுத்த வேண்டாம் என டெல்லி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

நகரின் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் 3 மணி நேரம் காத்திருக்கும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, டெல்லிக்கு ஆரஞ்சு அலார்ட் வழங்கப்பட்டுள்ளது; மேலும், 1975ம் ஆண்டு டெல்லியில் பருவமழை காலத்தில் 1,150 மிமீ மழைப் பதிவானது. ஆனால், டெல்லியின் மழைக்காலமாக உள்ள ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை 1,100 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது, செப்டம்பர் 15ம் தேதி வரை மழை நீடிக்கும் என்பதால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பருவமழை காலத்தில் அதிக அளவு மழைபொழிவைக் கண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
டெல்லி பேரிடர் நிர்வாகம் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தொடர் மழை காரணமாக பணியில் தொய்வு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























