தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக பொறுப்பேற்கவிருப்பதை அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவேற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று “தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும். தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆளுநராகப் பொறுப்பேற்கும் ஆர்.என்.ரவி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி. 1974 ம் ஆண்டு இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிகைத் துறையில் சில காலம் பணியாற்றிய இவர், 1976ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்தார்.
அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர் பின் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























