கொரோனா பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்க உரிமையாளர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாய் இருப்பது ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கிற ‘அண்ணாத்த’ திரைப்படம்தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினி நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த ‘தர்பார்’ படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அஜித்தை வைத்து வீரம், விஸ்வாசம் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணையும்போதே படம் பெரிய வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படவிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் பெரும் ஆவலோடு அதனை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ வெளியாகி எப்படி பொதுமக்கள் திரையரங்கை நோக்கி ஈர்த்ததோ, அதே போல ‘அண்ணாத்த’ படமும் ஈர்க்கும் என்கிற நம்பிக்கையில் மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
























