இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா இரட்டைக்கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
இயக்குநர் ஷங்கர் 2.0 திரைப்படத்துக்குப் பிறகு இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில், அத்திரைப்படம் சில சர்ச்சைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் தெலுங்கு முன்னணி இளம் நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமாகிய ராம்சரண் தேஜாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இத்திரைப்படத்தின் நாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இசையமைக்க ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இன்று நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க விழாவில் படக்குழுவினரோடு நடிகர் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஷங்கர் இந்திய அளவில் அறியப்பட்டவர். ராம்சரண் தேஜா தெலுங்கு திரையுலகு மட்டுமின்றி ‘மஹதீரா’ படத்தின் டப்பிங் மூலம் பிற தென்னிந்திய மொழிகளுக்கும் பரிட்சயமானவர். நடிகை கியாரா அத்வானி இந்தித் திரைப்படங்களுக்கு நிகராக தெலுங்கிலும் பல படங்கள் நடித்திருக்கிறார். ஆகவே இத்திரைப்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























