மதநல்லிணக்கம் பற்றி பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டங்களுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதனை எதிர்த்த பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குடியுரிமைத் திருத்த சட்டங்களால் இசுலாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி முதல்வரின் தீர்மானத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் ”மத நல்லிணக்கத்தை பேணும் பொருட்டு குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக முதல்வர் கூறுகிறார். மத நல்லிணக்கம் பேசும் முதல்வர் ஸ்டாலின் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதிப்பதில்லை. ஆனால் மத நல்லிணக்கம் மட்டும் பேசுகிறார்.” என்று கூறினார். மேலும் நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
























