பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
2022ம் ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா தலைமை நியமித்துள்ளது. இவற்றில் உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் அளித்துள்ளது. அதன்படி, உத்திரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் உள்ளிட்ட 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி, மீனாக்ஷி லேகி உள்ளிட்ட 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அடிக்கடி அரசியல் மாற்றம் நிகழும் உத்தரகண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக லொகேட் சாட்டர்ஜி உள்ளிட்ட 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக பூபேந்தர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக பிரத்திமா போமிக் உள்ளிட்ட 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பாட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து பணியாற்ற மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநில தேர்தலில் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இரண்டு மாநிலங்களில் மட்டும் கூடுதலாக மத்திய அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளராக நியமித்து பாரதிய ஜனதா தலைமை அறிவித்துள்ளது.
























