பாற்கடலில் கடைந்தெடுக்கும்போது வெளியான ஆலகால விஷத்தை அருந்திய பின்னர் சிவபெருமான ஆனந்தத் தாண்டவம் ஆடிய பிரதோஷ காலம் சிவ பக்தர்களுக்கு மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இப்பிரதோஷத்திலேயே நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என ஐந்து வகைகள் இருக்கின்றன. அவை குறித்துப் பார்ப்போம்.
நித்தியப் பிரதோஷம்
ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பிருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து) நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம் நித்தியப் பிரதோஷம் எனப்படுகிறது.
பக்ஷப் பிரதோஷம்
வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படுகிறது.
மாதப் பிரதோஷம்
தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படுகிறது.
மகா பிரதோஷம்
சனிக்கிழமையன்று பிரதோஷ காலத்தில்தான் சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்தார். ஆகவே சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படுகிறது.
பிரளய பிரதோஷம்
உலகம் அழிவுறும் பிரளய காலத்தில் எல்லா உயிரினங்களும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
























