சிவ பக்தர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மிக முக்கிய நாளாக இருக்கிறது. விசேஷ நாளான அன்று மாலையில் அனைவரும் தவறாமல் கோயிலுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுகிறோம். சிறப்பு வாய்ந்த நாளான பிரதோஷம் எப்படி உருவாகி வந்தது என்பது பற்றிப்பார்ப்போம்.
அரசன் தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானை) மீதமர்ந்து மிடுக்காக ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது எதிரில் வந்த துர்வாச முனிவர் மிகுந்த அன்போடு தன் கையில் இருந்த மலர் மாலையை தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக வழங்கினார்.
தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். யானை அதனை தனது காலடியில் போட்டு மிதித்தது. இதனால் சினங்கொண்ட துர்வாசர் லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டி கொடுத்த மாலையை அவமதித்ததால் உன் செல்வம் முழுவதையும் இழந்து போவாய் என்று சாபம் வழங்கினார். உடனே பலித்த அச்சாபத்தின் விளைவாக தேவேந்திரனது செல்வங்கள் அனைத்தும் நீங்கி மறைந்தன.
பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலைக்கு தேவேந்திரன் ஆட்பட்டதால் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிவெடுத்தனர்.
திருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.
சோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கிப்பிடித்து மூழ்காதபடி தடுத்தார். மீண்டும் கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் நேரே சென்று சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து ஆலகால விஷத்திலிருந்து காக்கும்படி வணங்கினர்.
சிவபெருமானின் வார்த்தைக்கிணங்க அவரது மறுவடிவான சுந்தரர் விஷத்தைக் கொண்டு வந்தார். (அதன் பொருட்டு அவர் ஆலகால சுந்தரர் என்றழைக்கப்படுகிறார்) விஷத்தை வாங்கிய சிவபெருமான், விழுங்கினால் அகில உலகமே பாதிக்கப்படும் என்பதால் அதை உண்டு விழுங்காமல் தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு ‘(திரு)நீலகண்டர்’, ‘ஸ்ரீகண்டன்’ என்ற திருப்பெயர்கள் உண்டாகின.
தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மனக்கலக்கம் தீர்ந்து மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் மேலும் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். மற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.
பிரதோஷத்துக்கு ‘ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் ‘ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். ‘ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும். வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் – மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படுகிறது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடி அருள் புரிந்தது ஒரு சனிக்கிழமை என்பதால் அக்கிழமையில் வரும் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

























