இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இதனால் ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் லண்டனில் தொடர்ந்து 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும். அதன்பிறகு பரிசோதனையில் இரண்டு முறை கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு தான் இந்திய அணியினருடன் இணைய முடியும்.
எனவே அவர்கள் மான்செஸ்டரில் (செப்.10-14) நடைபெறும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
























