டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்டது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துவிட்டன. மேலும், சில நாடுகள் இந்த வாரத்திற்குள் தங்கள் அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கான, வேலைகளையும் பிசிசிஐ தீவிரமாக செய்து வருகிறது. இன்று அல்லது நாளை அணி அறிவிக்கப்படலாம்.
இந்நிலையில், இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 15 ரெகுலர் வீரர்கள், 3 ரிசர்வ் வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னணி வீரர்களான ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின் முகமது ஷமி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய உத்தேச அணி : ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா, ராகுல் சஹார்.


























