தூக்கம் கெடுதலைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு கேட்ஜெட் பயன்பாடுகள் மிகுந்து விட்டன. செல்ஃபோன் அல்லது லேப்டாப் உபயோகித்துக் கொண்டே இரவு முழுவதும் தூங்காமல் இருப்பவர்கள் பெருகி வருகிறார்கள். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தூக்கம் மிக அவசியம். எனவே தூக்கத்தை முறைப்படுத்த வேண்டும். தூங்குவதற்கென்று குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில்தான் தூங்க வேண்டும். இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை தூங்குவதை முறைப்படுத்திக் கொள்ளலாம்.
என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உணவுப்பழக்கத்தின் மூலம்தான் உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடற்பருமன் ஏற்படும். எனவே ‘அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்று வள்ளுவர் சொன்னதற்கிணங்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். முடிந்த வரை கெட்ட கொழுப்புகள் மிகுந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். துரித உணவுகள் மற்றும் பீட்சா, பர்கர், சாண்ட்விச் போன்ற ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கேட்ஜெட் பழக்கத்தை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். கேட்ஜெட் பயன்பாட்டால் பல வித பாதிப்புகள் இருக்கின்றன. நாம் செயலின்மைக்குள் சென்று விடும் அபாயம் இருக்கிறது. முழுவதும் கேட்ஜெட்க்கு நம்மை ஒப்புக்கொடுத்து விட்டால் நமது வாழ்வின் அன்றாட இயக்கமே பாதிக்கப்படும். உடல் இயக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமல் போய்விடும் என்பதால் உடற்பருமன் ஏற்படும்.
இரவு நேரத்தில் ஹெவியான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக பிரியாணி மாதிரியான உணவுகளில் கலோரி அதிகம் என்பதோடு செரிமானம் ஆவதற்கும் தாமதமாகும் என்பதால் இரவு நேரங்களில் இவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

























