இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றிப் பெற்று சமநிலையுடன் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதனால், செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியின்போது அவர் அணியுடன் இருக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ரவி சாஸ்திரியுடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இங்கிலாந்தில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று வெளியான முடிவுகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நெகடிவ் என வந்ததை அடுத்து இன்று ஓவல் மைதானத்தில் நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.
























