எல்லோரும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் நம் வாழ்வியல் முறை அதற்கு எதிராக இருக்கும்போது ஒன்றுமே செய்ய முடியாது. ஃபிட்டாக இருக்க விரும்புபவர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க சில டிப்ஸ் இதோ…
- உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தண்ணீர் அத்தியாவசியம். அதனால் ஒவ்வொரு உடலுக்கும் தகுந்தாற்போல் போதுமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதோடு உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
- தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். பலரும் தேங்காய் எண்ணெய் கொழுப்பு என்று நினைக்கிறார்கள். கொழுப்பிலேயே நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்கிற வேறுபாடு இருக்கிறது. தேங்காய் எண்ணெய் நன்மை விளைவிக்கக்கூடிய கொழுப்பு என்பதால் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.
- ஊட்டச் சத்துகள் அதிகம் உள்ள கேரட் ஐ பச்சையாக சாப்பிடலாம் அல்லது சாறாக்கிக் குடிக்கலாம். கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், தாது ஆகியவை அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்கும் பித்தநீர் சுரக்க கேரட் சாறு உதவுகிறது.
- ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு வைட்டமின் C மற்றும் B உள்ளதால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை குறையும். தசைகள் வலுவடைய புரதச்சத்து உதவும் என்பதால் ஃபிட்டாகவும் இருக்க முடியும்.
- க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தினமும் ஒருவேளையாவது க்ரீன் டீ குடிக்கலாம்.

























