2 வார காலமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைப்பெற்று வந்த பாராலிம்பிக்போட்டிகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று நிறைவடைந்தது.
இதில் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்றது.

கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி தொடங்கிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இதுவரை இல்லாத வகையில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 1984-ம் ஆண்டு நியூயார்க் பாராலிம்பிக் மற்றும் 2016-ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தலா 4 பதக்கங்கள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது முதல்முறையாக இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர் இந்தியக் குழுவினர்.
பதக்கப் பட்டியலில் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்கள் குவித்து சீனா முதலிடம் பிடித்தது. 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-வது இடமும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடமும் பிடித்தன.

நேற்று மாலை கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் அணிகளும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை அவனி லேகாரா ஏந்திச் சென்றார். அவருடன் இந்தியா சார்பில் 11 பேர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் குவித்த இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
























