மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில் மம்தாவின் தோல்வி பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இருந்தும் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதால் மூன்றாவது முறையாக மீண்டும் மம்தா முதல்வரானார்.
இந்நிலையில், இம்மாதம் 30ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முதல்வராக நீடிக்க நிச்சயம் சட்டப்பேரவை உறுப்பினராக வெல்ல வேண்டும் என்கிற நெருக்கடியுடன் இத்தேர்தலை எதிர்கொள்கிறார் மம்தா. இதன் பொருட்டே பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலுக்கு வழிவகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























