சமூக நீதிப்போராளியான பெரியார் என்கிற ஈ.வெ.ராமாசாமி அவர்களின் பிறந்த நாளான செப் 17ம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அறிவிப்பை வெளியிட்டதும் இது குறித்து அவர் பேசுகையில் “சமூகநீதியை நிலைநாட்ட தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். இந்தியா முழுவதும் சமூகநீதி பரவ பெரியார் விதைத்த அடித்தளமே காரணம். எந்தத் தயக்கமும் இல்லாமல் தமிழருக்கெதிரான, பெண்களுக்கெதிரான அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்த்தவர் பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டதில் பெரியாரின் பங்கு முக்கியமானது. நாடாளுமன்றத்துக்கே செல்லாத பெரியாரால்தான் இந்திய அரசியலமைப்பில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பெரியாரின் செயல்பாட்டைப் பற்றி பேச வேண்டுமென்றால் பத்து நாட்கள் அவையை ஒத்தி வைத்து விட்டுதான் பேச முடியும். சமூகநீதியை நிலைநாட்ட இறுதி வரை போராடிய அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17 சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும். அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிமொழி எடுக்கப்படும்.” என்று கூறினார்.
























