இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் களத்தில் இறங்கி பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய திரைக்கதையைக் கொண்டு இப்படத்தை இயக்கினார் சசி. அனைத்துத் தரப்பினரையும் அத்திரைப்படம் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து அதன் அடுத்த பாகமான ’பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இப்படத்தினை இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி படத்தினைத் தொடங்கி வைத்தார். பிச்சைக்காரன் பட இயக்குநர் சசியும் பூஜையில் கலந்து கொண்டார். மேலும், இத்திரைப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
























