இந்தியில் வெளியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 13-வது சீசன் டைட்டில் வின்னர் சித்தார்த் சுக்லா. இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழை அடைந்தார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கென பெரிய அளவிலான ரசிகப்பரப்பு உருவாகியது. இவர் நடித்த ‘பலிகா வாது’ என்ற தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தொலைக்காட்சித் தொடர் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராகவும் பங்கேற்றுள்ளார். மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (செப் 2) காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தித் திரையுலகம் மற்றும் ரசிகர்களிடையே நற்பெயரைப் பெற்ற சித்தார்த் சுக்லா 40 வயதிலேயே மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகையர் தொடங்கி பலரும் சித்தார்த் சுக்லாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
























