தமிழக முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியான இரண்டு வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகும்படியாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் சிக்கல் உருவாகியிருக்கிறது.

திரையரங்கில் வெளியான இரண்டே வாரத்தில் ஓடிடியில் வெளியிட உரிமை கொடுத்து விட்டதால் அத்திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக இது குறித்தான கலந்தாய்வுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதன்படி ஓடிடி தளத்துக்கென்றே திரைப்படங்களை தயாரிப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிப்போம் என்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஓடிடி தளத்தில் வெளியிடும் படத்திற்கான ப்ரிவியூ ஷோவிற்கு திரையரங்கம் வழங்கப்படாது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியான இரண்டே வாரத்தில் ஓடிடியில் வெளியிடும்படி ‘தலைவி’ படம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அத்திரைப்படம் திரையரங்கில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
























