இந்த செப்டம்பர் 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ரூ.900.50க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ரூ.25 உயர்த்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் மேலும் ரூ.25 – ஐ உயர்த்தியிருப்பது குடிமக்களிடம் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. நாளுக்கு நாள் சிலிண்டரின் விலையை உயர்த்திக் கொண்டே சென்றால் என்ன செய்வது என்கிற கேள்வியும் அச்சமும் உருவாகியிருக்கிறது.
இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து எடுத்துக் கொண்டால் சிலிண்டர் விலை உயர்வது இது மூன்றாவது முறையாகும். இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து எடுத்துக் கொண்டால் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ.190 உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தற்போது வரையிலான ஓராண்டில் ரூ. 290 உயர்த்தப்பட்டிருக்கிறது. சிலிண்டர் விலையேற்றத்துக்கு ஒரு முடிவே இல்லையா? என்பதுதான் இந்தியக்குடிமக்களின் கேள்வியாக இருக்கிறது.
























