சத்தியமங்கலம் என்றாலே சந்தனக்காடு என்றுதான் அனைவருக்கும் நினைவிருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கிற இடம் சத்தியமங்கலம் வனப்பகுதி. ஈரோட்டிலிருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சத்தியமங்கலம் நகரம்.
சூழலியலாளர்கள் சத்தியமங்கலம் வனத்தை ‘தமிழகத்தின் பசுமை நுரையீரல்’ என்றே குறிப்பிடுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிப்பது இந்த வனப்பகுதியில்தான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் மான்களும், நூற்றுக்கணக்கிலான வன உயிரிகளும் வாழும் பல்லுயிர்பெருக்கத்தின் இடமாக விளங்குகிறது. உணவுச்சங்கிலிப்படி புலிகள் வாழும் வனம் செழிப்பானது. தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதி குறித்து சூழலியல் ரீதியிலான சிறப்பம்சங்களை உள்ளடக்கியது.
தமிழக அளவில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் இங்கிருந்து பத்து கிலோ மீட்டரில் தொலைவில் அமைந்துள்ளது. பண்ணாரியில் இருந்து தொடங்கும் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளக் கடந்து சென்றால் திம்பம் மலைப்பகுதியை அடையலாம். அங்கிருந்து ஆசனூர் வழியாக தாளவாடி வரை செல்லலாம். பூங்காக்கள், காட்சி முனைகள் போன்ற சுற்றுலாப் பயணிகளுக்கான அம்சங்கள் எதுவும் இல்லையென்றாலும், முழுக்க முழுக்க கானகத்தின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லலாம்.
சத்தியமங்கலத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணை. 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடிவேரி அணை மற்றும் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை ஆகியவை இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் விருப்புக்குரிய இடங்களாகும்.

























