ஓடிடி ரிலீசாக வந்து பெருவெற்றி பெற்ற படமான சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு முன்பே முடிந்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருடிருந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடந்திருக்கிறது.
இதுவரை மொத்தம் 51 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், சிறிய இடைவெளிக்குப் பின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
புதிய முயற்சிகள் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சூர்யா தொடர்ச்சியாக பல தோல்விகளையே சந்தித்து வந்தார். இயக்குனர் ஹரி படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ அனைத்து தரப்பினரையும் கவர்ந்து பெரு வெற்றி பெற்றது. ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜுடன் சூர்யா இணைந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

























