இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐ.பி.எல் தொடரில் தற்போது சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஐ.பி.எல் 2021ம் கொரோனா பரவல் காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்தத் தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

2022ல் நடக்கும் தொடரில் அணிகள் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிக்க, பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதையடுத்து புதிய இரண்டு அணிகளுக்கான அடிப்படை ஏலத்தொகை 2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய 2 அணிகளுக்கான உரிமத்தைப் பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க பிசிசிஐ ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளிக்கான விண்ணப்பத்தின் விலை 10 லட்சமாகும். விண்ணப்பத்தை அக்டோபர் 5ம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 3000 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். மூன்று நிறுவனங்கள் சேர்ந்து குழுவாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 3-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அணியை வாங்கும் முயற்சிக்கு அனுமதி இல்லை என விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக உருவாகும் இரண்டு புதிய அணிகளும் அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானம், லக்னோவில் எக்னா மைதானம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளை வாங்க அதானி குழுமம், ஆர்பிஜி சஞ்சீவ் கோயங்கா குழுமம், டோரென்ட் மருந்து நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்விரு அணிகளை விற்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 10 அணிகள் வரவுள்ளதால் அடுத்த ஆண்டு 74 போட்டிகள் வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























