மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் சாத்தியப்பட்டது. தொடக்க காலத்தில் ரத்த தானம், கண் தானம் செய்வதற்கான விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டது. சமீப காலங்களில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் ரத்தம், கண் மற்றும் உடல் உறுப்புகளுக்கான வங்கிகள் அரசால் நிறுவப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தோலுக்கான வங்கிகளும் நிறுவப்பட்டு இயங்கி வருவது பற்றியான விழிப்புணர்வு பரவலாக இல்லை. பெரிய அளவிலான தீக்காயம், ஒவ்வாமை, கொப்புள நோயால் தோல் சிதைந்தவர்களுக்கு தற்காலிக நிவாரணமாக வேறொரு மனிதத் தோலை பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இது பற்றி சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசிடம் கேட்டோம்…
“தீ விபத்தினால் பெரிய அளவிலான தீக்காயம் ஏற்பட்டு மேல் தோல் சிதைந்தவர்கள், toxic epidermal necrolysis எனும் மருந்து மாத்திரை ஒவ்வாமையால் ஏற்படும் சரும பாதிப்புக்கு ஆளானவர்கள் மற்றும் கொப்புள வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் கிழிந்து சதை வெளியே தெரியும்படி இருக்கும். அதன் மீது காற்று படும்போது கடும் எரிச்சலும், வலியும் ஏற்படும். போக அந்தக் காயங்கள் மீது ஈக்கள் மற்றும் கொசுக்கள் முட்டையிடும் வாய்ப்பும் இருக்கிறது. அதில் தண்ணீர் படும்போது சீழ் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இது போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வாகஇன்னொரு மனிதத் தோலைப் பயன்படுத்தலாம்.
ஒரு உடலின் உறுப்பை இன்னொரு உடலுக்குச் செலுத்துவதற்கு நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், தானமாகப் பெறப்படும் உறுப்பு அந்த உடலுக்குப் பொருந்துகிறதா எனhuman leukocyte antigen (hla) பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அப்படிப் பொருந்தினால் மட்டும் அவ்வுறுப்பினைப் பொருத்த முடியும். நாம் பொறுத்தும் உறுப்பு உள்ளே சென்று அதன் பணியை மேற்கொள்ளும். ஆனால் தோல் அப்படியல்ல. ஒரு மனிதத்தோலை இன்னொரு மனிதருக்குப் பொருத்துவதற்கு எந்தப் பொருத்தங்களும் பார்க்க வேண்டிய தேவை இல்லை.
இறந்த உடலில் இருந்துதான் தோலைப் பெறுகின்றனர். இறந்த ஆறு மணி நேரத்துக்குள் தோல் பெறப்படுகிறது. தோல் பெறப்படும் உடல் ஏதாவது கிருமித் தொற்றுக்கு ஆளாகியிருந்ததா? என்று பார்த்தால் மட்டுமே போதுமானது. மற்ற உறுப்புகளை இன்னொரு உடலுக்குச் செலுத்தும்போது அது உள்ளே சென்று அதன் பணியைச் செய்யும். தோல் அப்படியல்ல. தோல் கிழிந்த இடங்களில் ட்ரெஸ்ஸிங்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தோலில் ஏற்பட்டுள்ள காயங்களில் காற்று மற்றும் நீர் புகாமலும், கிருமித்தொற்று ஏற்படாமலும் இருக்கும். காயங்கள் வறண்டு போகும்போது எரிச்சல் அதிகரிக்கும். ஆனால் இந்தத் தோல் பொருத்துவதன் மூலம் ஈரப்பதத்தைத் தக்க வைத்து நோயாளியை வலியிலிருந்து விடுவிக்க இயலும்.
இப்படியாகப் பொருத்தப்படும் தோல் தற்காலிக நிவாரணம்தான். பொருத்திய பின் ஒரு வார காலத்திலேயே உரிந்து வெளியே வந்து விடும். அதற்குள் காயம் ஆறி விடும். மேல் தோல் கிழிந்திருந்தால் மட்டுமே இது போன்று வேறு தோலைப் பொருத்த முடியும். ஆழமான காயங்களுக்கு பொருத்த முடியாது. தோலுக்கு அடியில் இருக்கும் சிவப்பான திசுக்கள் இருந்தால் மட்டுமே அதன் மேல் தோலைப் பொருத்த முடியும்.” என்றவர் தோல்வங்கியின் செயல்பாடு குறித்துப் பேசினார்…
”மற்ற உறுப்பு தானத்தைப் போல் தோலை தானமாகத் தர பலரும் முன் வருவதில்லை. காரணம் இறந்த உடலின் முகத்தில் உள்ள தோலை எடுத்து விடுவார்கள். இதன் மூலம் முகம் கோரமாகி விடும் என்று பயப்படுகிறார்கள். அது தவறானது. முகத்தில் உள்ள தோலை எடுப்பதில்லை. தொடைப் பகுதியில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. இதனால் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட உடல் எப்படி துணியால் போர்த்தப்பட்டு கொடுக்கப்படுமோ அப்படித்தான் கொடுக்கப்படும் என்பதால் வீண் பயம் தேவையில்லை. பெறப்படும் தோல் கிளிசரினால் பதப்படுத்தி வைக்கப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது.
சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தோல் வங்கி இயங்கி வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் தோல் தானம் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பலரும் பயன்பெறுவார்கள்” என்கிறார்.
– கி.ச.திலீபன்


























