கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள சுற்றுலாத் தளம் என்றாலே நீலகிரி மலைகளை மட்டும்தான் பெரும்பாலானோர் அறிந்திருப்பர். ஆனால் நீலகிரியைத் தாண்டிலும் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவற்றுள் வால்பாறை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. நிறைவான பயண அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் வால்பாறைக்குச் செல்லலாம். அதன் தட்பவெப்பநிலை எப்போதும் சீராக இருக்கும்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வால்பாறை. இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிகம் மழைபெய்யக்கூடிய இடம் என்பதால் இதனை தென்னிந்தியாவின் ‘சிரபுஞ்சி’ என்றும் அழைக்கின்றனர். ஊட்டி போன்று நடுங்க வைக்கிற குளிர் இல்லாமல் மிதமான தட்பவெப்பநிலையை விரும்புகிறவர்களுக்கு வால்பாறை ஓர் சொர்க்கபுரி. வால்பாறையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோலையார் அணைதான்ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை.

கூழாங்கல் ஆறு
சுற்றிலும் மலைகள் சூழ அதன் நடுவே அமைகப்பட்டிருக்கும் சோலையார் அணையின் காட்சி பயணிகளின் பார்வைக்கு விருந்தாக இருக்கும். சின்னக்கல்லார் அணை மற்றும் அருவி, கீழ்நீரார் அணை, வெள்ளமலை டனல், நல்லமுடி காட்சி முனை, நம்பர் பாறை காட்சி முனை, பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு என சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளதால் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவிக்குச் செல்லலாம். புன்னகை மன்னன் படத்தில் காட்டப்பட்ட அருவி என்பதால் அதிரப்பள்ளி அருவியை ’புன்னகை மன்னன் அருவி’ என்றும் அழைக்கின்றனர். பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்து வசதி உள்ளது. வால்பாறை ஓர் நகரம் என்பதால் விடுதிகள் அதிகம் இருக்கின்றன. அவரவரது பொருளாதார சூழலுக்கு ஏற்ப விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு 300 ரூபாய்க்குக்கூட தங்கும் விடுதி கிடைக்கிறது.
தமிழக – கேரள எல்லையில் அமைந்திருப்பதால் இரு மாநிலத்து உணவுகளும் இங்கே கிடைக்கும் என்பது சிறப்புக்குரியது. வால்பாறை நகரத்தை ஒட்டியே 3 கிமீ தொலைவில் கூழாங்கல்லாறு இருக்கிறது. தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே சுளித்து ஓடும் இந்த ஆற்றின் நீர் படிகத் தூய்மையுடன் இருக்கும். அங்கு குளிக்கலாம். வால்பாறையைப் பொறுத்த வரை மழைக்காலத்திலும், குளிர் காலத்திலும் அது மேலும் ரம்மியமாக இருக்கும். குடும்பத்தோடு சென்று சுற்றி வருவதற்கும் சரி, நண்பர்களோடு செல்வதற்கும் சரி அனைத்து தரப்பினருக்குமான தளங்களும் வால்பாறையில் உண்டு. விமானத்தில் வருகிறவர்கள், கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறையை வந்தடையலாம்.

























