உலகிலேயே எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் அரசு மோடி அரசுதான் என்றும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வால் சில தொழிலதிபர்கள் மட்டுமே இலாபம் பெற்றிருப்பதாகவும் கோவாவில் மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.
யூனியன் பிரதேசமான கோவாவில் 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கோவாவுக்கு வருகை தருகின்றனர். அதன்படி, ராகுல் காந்தி கோவாவுக்கு சென்றுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கச்சா எண்ணெயின் விலை மிக அதிகமாக இருந்த போதும் உயராத எரிபொருள் விலை பாஜக ஆட்சியில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் தற்போது குறைவாக உள்ளபோதும் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி விரிவாக பேசிய அவர் “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சர்வதேச எரிபொருள் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களை எட்டியது. இன்று, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் நீங்கள் இன்னும் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள். இன்று உலகிலேயே எரிபொருளுக்கு அதிகவரி விதிக்கும் நாடு இந்தியாதான். இந்த விலையேற்றத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தால், இதன் மூலம் 4-5 தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகின்றனர். சத்தீஸ்கரில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றினோம். பஞ்சாப், கர்நாடகாவிலும் போய் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எங்களின் தேர்தல் வாக்குறுதியில் எது வந்தாலும் அது ஒரு உத்தரவாதம், வாக்குறுதி மட்டுமல்ல” என்று பேசியுள்ளார்.
























