சொகுசுக்கப்பலில் போதைப் பொள் பயன்படுத்திய வழக்கில் வழக்கில் கைதான நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் நான்கு வார சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் இன்று வெளியே வந்தார்.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது, வெள்ளிக்கிழமைகளில் போதை தடுப்பு பிரிவு முகமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் போன்றவை அடக்கம். சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு வியாழனன்று மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடனான ஜாமீன் வழங்கியது. ஜாமீனுக்கான நிபந்தனைகள் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில் ஆர்யன் கான் வெளியே வந்தார்.
நேற்றே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும் மாலை 5:30 மணி வரையிலும் சிறை அலுவலர்களுக்கு ஜாமீன் குறித்த உத்தரவுகள் கிடைக்க்கப் பெறாததால் அவர் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று. இன்று காலை சிறை அலுவலர்களுக்கு ஜாமீன் உத்தரவு கிடைத்ததையடுத்து, ஆர்யன் கானை விடுவிக்கும் நடைமுறை தொடங்கியது. இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் கான், பலத்த பாதுகாப்புடன் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை முதலே, ஷாருக் கான் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர். ‘ஆர்யன் கானை வீட்டுக்கு வரவேற்கிறோம்’ என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி வீட்டின் முன்பு அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆர்யன் கான் சார்பாக அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஷாருக் கானின் நெருங்கிய நண்பரான நடிகை ஜூஹி சாவ்லா, ஆர்யன் கானுக்காக 1 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
மும்பை – கோவா சென்ற சொகுசுக்கப்பலில் போதைப்பொருட்கள் சிக்கின. மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் ஆர்யன் கான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அவரிடம் எந்த போதைப்பொருளையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவரது வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் அவர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதை பொருள் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதும் வெளிநாட்டு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் நிரூபிக்கப்பட்டதாக போதை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது, வெள்ளிக்கிழமைகளில் போதை தடுப்பு பிரிவு முகமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் போன்ற 14 நிபந்தனைகளுடன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
























