கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். பள்ளி தேர்வுகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாணவர் கீர்த்திவாசன் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற வில்லை. 2021 ஆகஸ்ட் மாதம் நடந்த நீட் தேர்வினையும் எழுதிய அவர், முடிவிற்காக காத்திருந்தார்.
3 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத நிலையில் இனி மருத்துவராக முடியாது என்ற கடும் மன உளைச்சலில் மாணவர் கீர்த்திவாசன் இருந்ததாக கூறப்படுகிறது.
பள்ளியில் மாணவர் கீர்த்திவாசன் இரண்டாவது ரேங்க் வாங்குவார் எனவும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்று இருந்த நிலையில் மத்திய அரசு தேர்வை அறிவித்ததால் சரியாக தயாராகாமல் இருந்த மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவர் கீர்த்திவாசன், 3 ஆண்டுகளாக வேறு கல்லூரிக்கு செல்லாமல் நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக உயிர் விட்டதாக உறவினர்கள் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. நீட்தேர்வு காரணமாக மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
























