இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்குவதில் இழுபறி நிலவி வருகிறது. அதற்கான விளக்கத்தையும் உலக சுகாதார அமைப்பு அளித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை தயார் செய்த பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசியின் திறன் குறித்த ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் ஏப்ரல் 19ம் தேதி சமர்பித்தது. மேலும், தடுப்பூசி குறித்த தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவிடம் தொடர்ந்து விரைவாக அளித்துவருவதாக அவ்வமைப்பின் உயர்மட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்தில், கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க உலக சுகாதார அமைப்பிடம் நிபுணர் குழு பரிந்துரைக்கும் என்றும், தரமான தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மேல் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் பெறும் நோக்கோடு, பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசியின் திறன் குறித்த ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் ஏப்ரல் 19ம் தேதி சமர்பித்தது. உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு செவ்வாய்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தியது. அப்போது, அவசர கால அனுமதி பெறுவதற்கான இறுதி மதிப்பாய்வை மேற்கொள்ள தடுப்பூசி குறித்த கூடுதல் விவரங்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் ஆலோசனை குழு கேட்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் மருத்துவர் மரியாங்கலா சிமாவோ கலந்து கொண்டார். சீன தடுப்பூசிகளான சினோபார்ம், சினோவாக் ஆகியவை போதுமான தரவுகளை அளிக்காதபோதிலும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது ஏன் தாமதமாகிறது என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்களை தொடர்ந்து விரைவாக அளித்துவருகிறது. விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்க வழிவகை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
























