1993 ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு வீரப்பனை பிடிக்க மலை கிராம பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது மலை கிராம மக்களை பிடித்து சித்திரவதை முகாம்களில் சிறை வைத்து பாலியல் வன்முறை உள்பட மோசமான கொடுமைகள் அதிரடிப்படையினரால் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி, இது குறித்து விசாரிக்க சதாசிவா குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இழப்பீடு வழங்க இந்த குழு பரிந்துரை செய்தது. இதன்படி இரு மாநில அரசுகளும் தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தன.
கடந்த 2007 ஆம் ஆண்டு, இந்த 10 கோடி ரூபாயில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 கோடியே 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கக் கோரி விடியல் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ”மனுதாரர் அமைப்பின் கோரிக்கை குறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
























