டி20 கிரிகெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
இம்மாதம் 24ம் தேதி டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மாணவகள் மற்றும் ராஜஸ்தான் ஆசிரியை உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வரிசையில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் வெற்றி கொண்டாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். யோகியின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம் என்று பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
























