விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் விஜய் அரசியலுக்கு வருகிறாரா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் தங்களது பிரச்சாரங்களில் விஜயின் படத்தை பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் அவர்களில் கணிசமான அளவில் வார்டு உறுப்பினர் போட்டியில் வென்றிருந்தனர்.

யாருமே எதிர்பார்த்திராரத வண்ணம் திடீரென தேர்தல் அரசியலுக்குள் நடிகர் விஜய் இறங்கியிருப்பது பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று முன் தினம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் விஜய் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது அவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களையும் அவர் தனது பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான முன்னோட்டமாக இச்செயல் பார்க்கப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மலரவிருக்கிறது என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
























