இயக்குநர் அட்லீ நடிகர் ஷாருக்கானை நாயகனாக வைத்து இயக்கி வரும் இந்திப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழில் வெற்றித் திரைப்படங்களான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அட்லீ. அவர் இயக்கிய நான்கு திரைப்படங்களும் வெற்றிப் படங்களானதை அடுத்து தமிழில் நல்ல மார்க்கெட் கொண்ட இயக்குநராய் இருக்கிறார். இவர் பிகில் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷாருக்கானை நாயகனாக வைத்து இந்திப் படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் இருக்கிறார். இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெர்சல், பிகில் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். தென்னிந்திய மார்க்கெட்டையும் கவர்வதற்காக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையைத்தான் நாயகியாக தேர்வு செய்ய படக்குழு முடிவெடுத்தது. அதன் பிறகு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. அட்லீ இயக்கத்தில் நயன் ராஜா ராணி, பிகில் ஆகிய இரு படங்களில் நடித்திருக்கிறார். ஆகவே இப்படத்திலும் அவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தாமதாமாகியுள்ளதால் இந்தப் படத்தில் இருந்து நயன்தாரா விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நயன்தாராவுக்கு பதிலாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























