தேமுதிகவை 100 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றுபவர்களை நம்பி கழகத்தை விட்டு செல்வது கழகத்துக்குச் செய்யும் துரோகம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என்று யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். மூளைச்சலவை செய்வோரின் பேச்சு மற்றும் ஆசைவார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது துரோகம். அது எனக்கு இழைக்கும் துரோகம் மட்டுமல்ல கழகத்துக்கு இழைக்கும் துரோகம் என்பதையும் உணர வேண்டும். அப்படி தேமுதிகவிலிருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு செல்பவர்கள், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் விரைவில் வரும். எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். தேமுதிக வேரூன்றவும், வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லவும் தொண்டர்களின் உறுதுணை தேவை” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
























