இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்தை இயக்கியவர் ‘தாதா சாகேப் பால்கே’. ஆகவேதான் அவர் இந்திய திரையுலகின் தந்தையாகக் கருதப்படுகிறார். அவரது பெயரில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் விருதளிக்கப்பட்டுள்ளது.
அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் ரஜினியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரும், ரஜினியின் குருவுமாகிய தமிழ் திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்ட நிலையில் அதே விருதை தானும் பெறுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக ரஜினி தெரிவித்திருக்கிறார்.

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் காட்சிதான் அவர் அறிமுகமானது. அப்படியாக திரையுலகத்துக்குள் நுழைந்த அவர் தனது அபாரமான திரைப்பங்களிப்பின் வாயிலாக கோடானுகோடி ரசிகர்களின் மனதை வென்றார். ரஜினி என்றாலே ஸ்டைல்தான் ஸ்டைல் என்றாலே ரஜினிதான் எனுமளவுக்கு ஸ்டைலான நடிகராய் வலம் வந்தார். ஆக்ஷன் காட்சிகளுக்கு நிகராக நகைச்சுவையும் சிறப்பாக செய்யக்கூடிய நடிகராக அவர் இருந்ததால் குழந்தைகளின் மனதை வென்றார். கமல் போன்ற ஓர் பெரும் நடிகனுக்கு நிகரான காலகட்டத்தில் தனக்கேயான பிரத்யேக உடல்மொழியால் வணிக ரீதியில் பெருவெற்றி பெற்றார்.
ஒரு புறம் வணிக ரீதியான படங்களில் நடித்தாலும் முள்ளும் மலரும், தளபதி போன்ற படங்களின் வாயிலாக தனது நடிப்பாற்றல் என்னவென்பதை வெளிப்படுத்தியவர் ரஜினி. என்றைக்குமே அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று இன்றைக்கும் ரசிகர்கள் கொண்டாடும்படியான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கும் அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதில் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியத் திரையுலகினரே ரஜினிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
























