நமக்கோ நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கோ ஏதாவது ஆபத்து அவசரம் அல்லது விபத்து என்றால் உடனே நாம், காவல்துறைக்கோ அல்லது அவசர கட்டுப்பாட்டு உதவி மையத்துக்கோ அழைப்போம். உடனே சம்பந்தப்பட்ட காவல் துறையினர், தீயணைப்பாளர்கள், பேரிடர் மீட்பு படையினர் அல்லது பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை மேற்கொள்வார்கள்.
நியூசிலாந்தில் நடைபெற்ற ஒரு வினோத சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்கு நான்கு வயது குழந்தை ஒன்று, தனது அப்பாவின் மொபைல் போனை எடுத்து அவசர உதவி மையத்துக்கு அழைப்பு விடுத்தது. அங்கிருந்த அதிகாரி ஆச்சரியத்துடன் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த குழந்தையோ ‘நான் உங்களுக்கு என்னுடைய பொம்மைகளை காட்ட விரும்புகிறேன். பொம்மைகளை பார்க்க எங்கள் வீட்டுக்கு வாருங்கள்’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளது.
குழந்தையின் தந்தை உடனடியாக இதை தெரிந்துகொண்டு மீண்டும் அதே எண்ணிற்கு கால் செய்து குழந்தை செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவசர உதவி மையத்தை சேர்ந்த அதிகாரிகள் இதனை விளையாட்டாக நினைத்து கடந்துவிடவில்லை. அந்த குழந்தையை பார்க்க வீட்டுக்கே சென்றுவிட்டனர். கர்ட் என்ற போலீஸ்காரர் குழந்தையின் வீட்டுக்கு சென்று, குழந்தையிடம் தான் வந்துவிட்டதாக கூறினார். அந்த குழந்தை வீடு முழுவதும் உள்ள பொம்மைகளை அவருக்குக் காட்டியது. அதனை பார்த்த கர்ட், அக்குழந்தையிடம் விளையாடினார்.
கர்ட்டும், அந்த குழந்தையும் பேசும் வீடியோவை காவல்துறையினர் பேஸ்புக்கில் வெளியிட்டனர். குழந்தையுடன் பேசும் போலீஸ்காரர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்டோபர் 15 அன்று இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த வீடியோவை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள், ’நீங்கள் இவ்வளவு அழகான மனிதர்களாக இருப்பீர்கள்’ என்று நினைக்கவில்லை. காவல்துறை எப்பொழுதும் கம்பீரமாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
குழந்தையுடன் யார் இருந்தாலும் அவர்களும் சிறு குழந்தையாக மாறிவிடுவார்கள். அனைத்து நாட்களிலும் வேலை செய்யும் காவலர்களுக்கு ஓய்வு தருவது அவசியம் ஆகும் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த நல்ல வீடியோவை ஷேர் செய்ததற்கு நன்றி என்றும், குழந்தை கேட்டதற்காக காவல்துறை செய்யும் உதவி பெரியது. அந்த குழந்தை எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும், அற்புதமான வீடியோ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
























