இன்று 4வது நாளாக இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் பெட்ரோல் விலை 107 ரூபாயை கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயிக்கும் முறையை கடைப்பிடித்து வரும் நிலையில், மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 113 ரூபாயை நெருங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிரித்து, லிட்டர் ஒன்றின் விலை 104.22 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை கடந்த 19ம் தேதி 15 காசுகள் அதிகரித்து 103.16 ரூபாயாக இருந்தது, கடந்த 20ம் தேதி 15 காசுகள் அதிகரித்து 103.31 ரூபாயாக இருந்தது, 21ம் தேதி 40 காசுகள் உயர்ந்து 103.71 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ. 100-ஐக் கடந்த டீசல் விலை…
டீசல் விலை சென்னையில் இன்று இதுவரை இல்லாத அளவாக 100 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களாகவே பெரிய அளவில் டீசல் விலை ஏற்றம் இல்லை என்ற போதிலும், சிறிது சிறிதாக உயர்ந்து இன்று டீசல் லிட்டர் ஒன்றில் விலை 100.25 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலையேற்ற எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
























