நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரப்பட்ட நிலையில் இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நாளை சந்தித்து உரையாடவிருக்கிறார் ஆர்.என்.ரவி.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 13ம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் 6 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்லும் ஆளுநர் நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இச்சந்திப்பின் போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விளக்கு அளிக்கும் சட்ட மசோதா குறித்து பிரதமரிடம் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரதமருடன் சந்திப்பு முடிந்தவுடன் மூத்த அமைச்சர்களையும் ஆளுநர் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதல் முறையாக பிரதமரை ஆளுநர் சந்திக்கவிருப்பதால் இச்சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
























