தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்பதை மத்திய அரசின் வல்லுநர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் என்பதோடு மரங்கள் நடுவது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டவர் நடிகர் விவேக். அவர் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் ஏப்ரல் 17ம் தேதி அவர் உயிரிழந்தார்.
விவேக் மரணம் தொடர்பாக அதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன. அவற்றில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் விளைவாகத்தான் விவேக் இறந்தார் என்கிற வதந்தி அதிதீவிரமாக பரவிய நிலையில் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவே அச்சப்பட்டனர். இந்நிலையில் விவேக் மரணத்தை அடுத்து, தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய மத்திய அரசின் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதன் ஆய்வுகள் முடிந்த நிலையில் ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் அதன் விளைவாக அவர் இறந்ததாகவும் வல்லுநர் குழு தெரிவித்திருக்கிறது. தடுப்பூசியால் இம்மரணம் நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விவேக் மரணம் தடுப்பூசியால் நடைபெறவில்லை என மாநில சுகாதாரத்துறை விளக்கம் கொடுத்தது. தற்போது மத்திய குழு கூறியிருப்பதன் மூலம் தடுப்பூசியால் விவேக் மரணம் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே தடுப்பூசி குறித்தான அச்சம் தவிர்ப்போம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம்.
























