FATF எனப்படும் பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானை, தொடர்ந்து சாம்பல் பட்டியலில் தக்கவைத்து உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் நட்பு நாடான துருக்கியையும் தற்போது சாம்பல் பட்டியலில் அந்த அமைப்பு சேர்த்து உள்ளது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு இரட்டை அடியாக உள்ளது. முன்னதாகக் கருப்பு பட்டியலில் நுழைவதைத் தவிர்க்க துருக்கியின் ஆதரவை பாகிஸ்தான் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஜோர்டான் மற்றும் மாலி ஆகியவையும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் மார்கஸ் பிளேயர், ’லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும் தலீபான் போன்ற அமைப்பினருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தானைப் போல ஜோர்டான், மாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் சாம்பல் பட்டியலில் தற்போது இருக்கிறது’ எனக் குறிப்பிட்டார்.
மேலும் பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்திருக்க இந்தியாவின் அழுத்தம் காரணமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு எப்ஏடிஎப் மறுப்பு தெரிவித்தது. தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் மீது விசாரணை மற்றும் வழக்குத் தொடரப்படுவதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
























