இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான இந்தியத் திரைப்படப் பரிந்துரை பட்டியலில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குநர் இயக்க யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நேரடியாக விஜய் டிவியில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. நம் ஜனநாயகத்தில் ஒரு ஓட்டுக்கான வலிமை என்ன என்பது பற்றியும் தேர்தலுக்குள் இருக்கும் சாதிய அரசியல் பற்றியும் இத்திரைப்படம் பேசியதால் முற்போக்காளர்கள் பலரும் இப்படத்தைக் கொண்டாடினர்.

பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்ற ‘மண்டேலா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் விருதுகளிலேயே உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலிருந்து ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலில் மொத்தம் 14 திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப்படம் மண்டேலா. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான மலையாளப்படமான ‘நயாட்டு’ திரைப்படமும், வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்த ஷெர்னி திரைப்படமும் இப்பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த 14 திரைப்படங்களிலிருந்து ஒரு திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும். அதற்கான திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
























