தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 11000 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள், சென்னையில் 690 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வடிகால்கள் தூர் வரப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழகத்தில் தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 11276. 62 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 690.07 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4,227 மழை நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல நெடுஞ்சாலைத் துறையால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 677 பாலங்கள், சிறு பாலங்கள் அடியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது, வருவாய்த்துறை.
மேலும், 6,618 கிலோ மீட்டர் நீளத்திற்கு பொதுப்பணித்துறையின் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, 18,626 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப் பட்டுள்ளதோடு, மின்துறையின் சார்பாக 1.12 லட்சம் மின் கம்பங்களும், 25000 கிலோமீட்டர் நீளம் கொண்ட மின் கடத்திகள் மற்றும் 800 மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் காலங்களில் முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21 ஆயிரத்து உயர் VHF கருவிகளும், 600 செயற்கைக்கோள் தொலைப்பேசிகளும், 296 நேவிகேசன் உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வருவாய்த்துறை, சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அவசரக் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1070 மற்றும் 1077 என்று இலவச தொலைப்பேசி எண்ணும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
























