அஇஅதிமுக-வின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் தலைவாசலில், பேருந்து நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, கழக கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 435 பேர் மருத்துவம் படிக்க காரணமாக இருக்கிறோம். திமுக தேர்தல் நேரத்தில் பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதி தந்தனர். 202 வாக்குறுதியை நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறுகிறார். நகைகடன் தள்ளுபடி செய்தது அதிமுக என்பதால், அதில் முறைகேடு என்று கூறி 53 கட்டுபாடுகளை கொண்டுவந்துள்ளனர்.
இதன் மூலம் 5 சதம் பேர் கூட பயன்பெற முடியாது. இதை தேர்தல் நேரத்திலேயே சொல்லியிருக்கலாமே. மக்களை ஏமாற்றி உள்ளனர். நீட் தேர்வு ரத்து என்று கூறி, அதிமுக கடைபிடித்த வழி முறையைதான் அவர்களும் பின்பற்றுகின்றனர். சட்மன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் அளிக்கவில்லை. நீட் தேர்வை இவர்களால் எந்த காலத்திலும் ரத்து செய்யமுடியாது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் தான். திமுகவின் 5 மாத சாதனை என்ன என்று பார்த்தால், அதிமுக அடிகல் நாட்டி வைத்த திட்டங்களை திறந்து வைப்பதுதான். கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 5 மாதமாக மெகா தடுப்பூசி முகாம் என்று மெகா பொய்பேசி வருகின்றார்.
விழிப்புணர்வு இல்லாததால் பலர் இறந்து வருகின்றனர். அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கழகத்தை உடைக்க பார்க்கிறார். அது எப்போதும் முடியாது. கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது அதிமுக தான். அதிமுகவினரின் செயல்பாடுகளை தடுக்கதான் நிர்வாகிகள்மீது வழக்கு போடுகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றதாக அறிவித்தது, தேர்தல் ஆணையம். அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைபடி தேர்தல் நடத்தினோம். திமுக ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நேர்மையான அரசியல் செய்தார்கள்.
இம்முறை தோற்றாலும் அடுத்தமுறை வெற்றி பெறுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
























